வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரம் தொடர்பாக எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்தின் நெருங்கிய நண்பரான மதன், வேந்தர் மூவிஸ் என்கிற பெயரில் திரைப்பட நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த மே 28ஆம் தேதியில் இருந்து மதனைக் காணவில்லை. அவரது அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தான் காசிக்குச் சென்று உயிரோடு சமாதியடையப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்ததார்.
இதையடுத்து எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம்பெற்றுத் தருவதாகக் கூறித் தங்களிடம் மதன் பணம் பெற்றதாக 102 பேர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
72.5 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு தலைமறைவான மதனைக் கண்டுபிடிக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்திய ஜனநாயகக் கட்சி மாநில மருத்துவர் அணிச் செயலாளர் பார்க்கவன் பச்சமுத்து, மதுரை மாவட்டச் செயலாளர் சண்முகம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பாபு, மதனின் நண்பர் விஜயபாண்டியன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாயமான மதன் எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்பதை 3 மாதங்களாகியும் கண்டுபிடிக்க முடியாததால் காவல்துறைக்கு நெருக்கடி அதிகரித்தது. இந்த வழக்கில் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் விசாரிக்கவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகளும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதன் மாயமானது தொடர்பாகவும், எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லுாரியில் சீட் வாங்கித்தர பணம் பெற்றது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Link : http://ns7.tv/ta/srm-owner-pachaimuthu-interogated-police.html