சென்னை : வேந்தர் மூவிஸ் நிறுவனர் மதன் மாயமான நாளில் இருந்து எஸ்ஆர்எம் குழுமம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் நாள்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாரிவேந்தர் எனப்படும் எஸ்ஆர்எம் தலைவர் பச்சமுத்துவுக்கு மதன் மிகவும் நெருங்கிய நண்பராக இருந்து வந்தார். மதன் தான் எழுதி வைத்த கடிதத்தில், காசிக்கு சென்று கங்கையில் சமாதி ஆகிறேன், என்னை யாரும் தேட வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் மாயமான மதன் மீது, எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ஏமாற்றியதாக பல்வேறு மோசடி புகார்களும் குவியத்தொடங்கின. இந்த மோசடியில் பச்சமுத்துவுக்கும் தொடர்பு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மதன் மாயமானது, மருத்துவ படிப்புக்கு பணம் வாங்கி மோசடி செய்தது என எஸ்ஆர்எம் குழுமத்தில் கடந்த ஒரு வாரமாக பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது பச்சமுத்து மீது வேறு ஒரு புது புகார் எழுந்துள்ளது. சூளைமேட்டை சேர்ந்த பைனான்சியர் மோகன்குமார், எஸ்ஆர்எம் பச்சமுத்து மீது சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: நான் கடந்த 25 ஆண்டுகளாக பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறேன். கடந்த 2004ம் ஆண்டும் எஸ்ஆர்எம் மெட்ரிகுலேஷன் பள்ளி சேர்மன் டி.ஆர்.பச்சமுத்து ரூ.70 லட்சம் லோன் வேண்டும் என கேட்டார். உரிய ஆவணங்கள் கொடுத்தால் பணம் தருகிறேன் என்றேன். அதன்படி எஸ்ஆர்எம் குழும ஆடிட்டர் சுப்பிரமணி மற்றும் டி.ஆர்.பச்சமுத்து ஆகியோர் ஆவணங்களுடன் எனது அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம், பொத்தேரி, பல்லாவரம், உள்ளிட்ட பகுதியில் பச்சமுத்துவுக்கு சொந்தமாக உள்ள இடங்களின் 5 ஆவணங்களை பெற்றுக்கொண்டு ரூ.70 லட்சம் வழங்கினேன். அப்போது பச்சமுத்து உறுதிமொழிப்பத்திரம் மற்றும் வங்கி செலானில் கையொப்பம் போட்டுக்கொடுத்தார்.
இந்த நிலையில் பச்சமுத்துவிடம் பணத்தை திருப்பி கேட்க சென்றபோது அவர் என்னை ஏமாற்றும் நோக்கில் பேசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
தற்போது பணம் கேட்டால், ‘நான் உன்னிடம் பணம் எதுவும் வாங்கவில்லை, ஆடிட்டர் சுப்பிரமணி தான் உன்னிடம் பணம் வாங்கினார். எனவே நான் பணம் எதுவும் தர முடியாது. மீறி என்னை தொந்தரவு செய்தால் விபரீதம் ஆகிவிடும். நான் அரசியலில் முக்கிய புள்ளியாக உள்ளேன். எனவே என்னிடம் பணம் கேட்டு வராதே’ என்று மிரட்டுகிறார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். எனவே என்னை ஏமாற்றிய பச்சமுத்து மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதே புகாரை மத்திய குற்றப்பிரிவு போலீசரிடமும் மோகன்குமார் அளித்துள்ளார். ஏற்கனவே கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி செய்த விவகாரத்திலும் மதன், பச்சமுத்து மீது புகார்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மோசடி புகார் வந்துள்ளதால் விரைவில் பச்சமுத்து மீது நடவடிக்கை பாயலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புகார் ெதாடர்பாக மோகன்குமாரிடம் கூறுகையில், ‘’பச்சமுத்து என்னிடம் பணம் வாங்கும்போது அன்பாக பேசினார். அதை நம்பி அவரிடம் உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு ரூ.70 லட்சம் பணம் வழங்கினேன். ஆனால் 2004ல் இருந்து அவர் எனக்கு வாங்கிய பணத்துக்கு வட்டி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகிறார். அரசியலில் இருந்ததால் நானும் பணத்தை திரும்ப கேட்க பயந்தேன். தற்போது என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற துணிச்சலுடன் புகார் அளித்துள்ளேன்’’’’ என்றார்.
Link : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=222947