சென்னை: வேந்தர் மூவிஸ் மதன் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எமது நிறுவனத்தின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் மதன் மோசடி செய்திருக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கும், எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மதன் ஏற்கனவே பலமுறை தொலைக்காட்சி பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், இந்திய ஜனநாயகக் கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் மதன் நீக்கப்பட்டுவிட்டார்.
மதனின் கடிதம் திட்டமிட்ட மிரட்டல் நாடகம் என்பதால், அதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கடந்த திங்கட்கிழமை புகார் அளித்து இருக்கிறேன். தன்னிச்சையாக மதன் செய்துள்ள மோசடிகளுக்கும், எங்களது நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றும் விளக்கம் அளித்து உள்ளார்.