பேராசிரியர் மாறாட்ட மோசடி: SRM பேராசிரியர்கள் கிளப்பும் புதிய புகார்கள்

srm_14

மாணவர்களிடம் கட்டண மோசடி, நில அபகரிப்பு என அடுக்கடுக்காக எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் மீது குற்றச்சாட்டுகள் குவியும் நிலையில், அந்த நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர்கள் தற்போது புதிய புகார்களை தெரிவித்துள்ளனர். 

எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிப்படி, பேராசிரியர்களை நியமிப்பதில்லை என்றும், பேராசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்குவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பும் பேராசிரியர்களை உரிய காரணம் ஏதுமின்றி, திட்டமிட்டு வேலையை விட்டு நீக்குவதாக முன்னாள் பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஆர்.எம். குழுமத்தின், ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியரை, அந்தக் குழுமத்தின் வேறு கல்வி நிறுவனத்தில் பணிபுரிவதாக போலியாக கணக்கு காட்டி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவை ஏமாற்றி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

சென்னை ராமாவரத்தில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில், அண்ணா பல்கலை அதிகாரிகள் சோதனைக்கு வரும் போது, அதே வளாகத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி பேராசியரை உடனடியாக அழைத்து, அதிகாரிகள் முன்னிலையில் கணக்கு காட்டும் நிலையும் இருப்பதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இதே போல உதவி பேராசியருக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நிர்ணயித்துள்ள ஊதியம் தராமலும், விதிமுறைக்கு மாறாக ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு வேலைக்கு சேர்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விதிமுறை மீறல் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Link : http://ns7.tv/ta/new-complaint-srm-its-professors.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *