புதிய_தலைமுறை ஊடக நிறுவனர் பாரிவேந்தர் பச்சமுத்து பல்வேறு மோசடி வழக்குகளின் கீழ் கைது!

பட அதிபர் மதன் மாயமான விவகாரம் தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை (26.08.2016) கைது செய்தனர்.

சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் மீது மோசடி செய்ததாக சட்டப்பிரிவு 420 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நம்பிக்கை மோசடி செய்ததாக ஐபிசி 406 மற்றும் ஐபிசி 34 ஆகிய பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான மதன், சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியதாக வெளியான கடிதத்தில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பாரிவேந்தரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மதனிடம் பணம் கொடுத்ததாகவும், தங்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் மாணவர்களும் பெற்றோர்களும் பாரிவேந்தர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையே மதனை கண்டுபிடித்து தரக் கோரி அவரது தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதன்பேரில், மதனை 2 வாரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதனை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

மதன் மாயமான வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்றம், ‘எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் வாங்கி தருவதாகத்தான் மதன் பணம் பெற்றுள்ளார் என்று 111 புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை ஏன் விசாரிக்கக் கூடாது என்று அண்மையில் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ‘பாரிவேந்தரிடமும் விசாரணை நடத்தப்படும்’ என்று கூறினார்.

இதையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று பாரிவேந்தருக்கு குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்பேரில், சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு (பழைய கமிஷனர் அலுவலகம்) நேற்று மாலை பாரிவேந்தர் வந்தார். அவரிடம் போலீஸார் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.

மேலும் எஸ்ஆர்எம் பல்கலைக் கழக தலைவர் ரவி பச்சமுத்து, மதனின் நண்பர் ரங்கபாஷ்யம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அலுவலர் சண்முகம் ஆகியோரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இவரைப்பற்றிய விவரங்கள்

பள்ளியில் கணித ஆசிரியராக பணியைத் தொடங்கிய பச்சமுத்து இன்றைக்கு கல்வித்தந்தை பாரிவேந்தராக உயர்ந்து நிற்கிறார்.

தனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும், வேந்தர் மூவீஸ் திரைப்பட நிறுவனத்தையும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.

காட்டாங்கொளத்தூர் அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் எஸ்.ஆர்.எம். வளாகம் , ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை போல பிரமாண்டமாக மிரட்டுகிறது.
10000 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரரான பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் 72.50 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1969ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி பள்ளி இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி கொள்ளை நிறுவனமாக வளர்ந்தது எப்படி?

நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி
வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி
எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி
எஸ்ஆர்எம் நர்சிங் கல்லூரி
எஸ்ஆர்எம் பிசியோதெரபி
எஸ்ஆர்எம் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ்
எஸ்ஆர்எம் பாலிடெக்னிக் கல்லூரி
ஈஸ்வரி பொறியியல் கல்லூரி
எஸ்ஆர்எம் பல்மருத்துவ கல்லூரி
எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம்
வள்ளியம்மை பொறியியல் கல்லூரி என 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் பச்சமுத்து.

இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன.

கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். நட்சத்திர விடுதிகள் , எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், இந்திய ஜனநாயக கட்சி என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து.

ஊடகத்துறையில் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற இரண்டு பத்திரிக்கைகளும், புதிய தலைமுறை என்ற செய்தி தொலைகாட்சியும் இயங்குகிறது. புதுயுகம், வேந்தர் டிவி ஆகிய பொழுதுபோக்கு சேனலும் நடத்தி வருகிறார்.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் 80% மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறது அதன் இணையதளம்.

நிகர் நிலைப் பல்கலைக் கழகமான எஸ்ஆர்எம் தனது கல்லூரிகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான நுழைவுத் தேர்வை தானே நடத்துகிறது. அதில் அவர்களே உருவாக்கும் தர வரிசைப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தரவரிசை எண்ணைப் பொறுத்து நன்கொடை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

யாரிடம் எவ்வளவு நன்கொடை வாங்குவது என்பதை பச்சமுத்து குடும்பத்தினர் மட்டுமே தீர்மானிக்கின்றனர்.

எஸ்ஆர்எம்மில் குறைந்த செலவில் இடம் வாங்கித் தருவதாக வாக்களிக்கும் தரகர்கள் பல வட இந்திய நகரங்களில் முளைத்திருக்கின்றனர்.

மருத்துவக் கல்லூரியிலோ இதனை விடவும் லட்சங்களின் எண்ணிக்கை கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 மாணவர்கள் பல்வேறு படிப்புகளில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *