பாரிவேந்தருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தலைமறைவு… மதன் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு! (வீடியோ)

1

சென்னை: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து பாரிவேந்தர், அவரது மகன் ரவி ஆகியோருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தான் மதன் தலைமறைவாகி உள்ளார் என்று அவரது தாயார் தங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு ‘சீட்’ வாங்கிக்கொடுக்கும் ஏஜென்ட் வேலையைச் செய்துவந்தவர் மதன். கடந்த 20 ஆண்டுகளாக இதே வேலையில் ஈடுபட்டதால் தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் நிறையத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

மேலும் திரைத்துறையிலும் கால்பதிக்க எண்ணி, கடந்த 2011 ம் ஆண்டு ‘வேந்தர் மூவிஸ்’ என்ற  சினிமா கம்பெனியைத் தொடங்கினார். அதிலும் கிடுகிடு வளர்ச்சியை எட்டி,  தமிழகத்தின் முன்னணி பட நிறுவன அதிபரானார். மதன் தனது நிறுவன பெயரில் வெளியான சில திரைப்பட விழாக்களுக்கு, எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் அதிபரும், ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் (எ) டி.ஆர்.பச்சமுத்துவை சிறப்பு விருந்தினராக பங்கேற்க வைத்துள்ளார். இதனால் வேந்தர் மூவிஸ் பாரிவேந்தருக்கு சொந்தமானது என்று  பேச்சு அடிபட்டது.

ஆனால், “வேந்தர் மூவிஸ் நிறுவனம் எனது சொந்த நிறுவனம் ஆகும். பாரிவேந்தர் மீது நான் கொண்டுள்ள பற்றும் பாசமும் மரியாதையின் காரணமாகவே எனது நிறுவனத்திற்கு  வேந்தர் மூவீஸ் என பெயர் வைத்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கும் பாரிவேந்தருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மதன் விளக்கமளித்து அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி தனக்கு நிறைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவற்றை பாரிவேந்தர் தீர்த்து வைக்கவேண்டும் என்றும் கூறி, ‘காசியில் கங்கையில் சமாதி அடையப் போகிறேன்’ என்று வேந்தர் மூவிஸ் லெட்டர் பேடில் கடிதம் எழுதி, வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டுத் தலைமறைவானார் மதன். இதை தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், காணாமல் போன மதனைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு அவரின் இரண்டு மனைவிகளும், தாயாரும் புகார் மனு அளித்தனர். போலீசாரும் அவரைக் கண்டுபிடிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். ஆனால், மதன் பற்றிய உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதனின் தாயார் தங்கம், ”வேந்தர் மூவிஸ் மதன் கடந்த பல ஆண்டுகளாக எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார். அதற்காக பெறப்படும் பணத்தை முறையாக பாரிவேந்தரிடம் அளித்தும் வந்துள்ளார். மதன் காணாமல் போனது குறித்த காரணம் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. பச்சமுத்து பாரிவேந்தர், அவரது மகன் ரவி, மதன் ஆகிய மூன்று பேருக்கிடையே ஏற்பட்ட பனிபூசல் ஆகியோருடன் ஏற்பட்ட மனக்கசப்பால்தான் மதன் தலைமறைவாகி இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்னைக்கு குறித்து பாரிவேந்தரிடம் நாங்கள் பலமுறை பேச முயற்சி செய்தும், அதற்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. ரவி சாரை பார்க்க முயன்றபோதும் அவர்கள் எங்களை உள்ளே விடவில்லை. அவரின் குடும்பத்தினரை பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் முடியாமல் தோல்வியடைந்துள்ளோம். இதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய முடியும்.  பாரிவேந்தரை கடவுளாக நினைத்து பூஜித்து வந்த எனது மகன், எஸ்.ஆர்.எம். குழுமத்திலிருந்தும், ஐ.ஜே.கே. கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டது ஏன்? என்பது பற்றியும் எங்களுக்கு தெரியவில்லை” என்றார்.

இதனிடையே, காணாமல் போன மதனை தேடி கண்டுபிடிக்க 2 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். அவர்கள், சென்னை மற்றும் வாரணாசியில் மதன் குறித்து விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Link : http://www.vikatan.com/news/tamilnadu/64858-my-son-abscond-of-resentment-with-pachamuthu.art?artfrm=related_article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *