அனைத்து சட்ட விதிகளையும் காற்றில் பறக்க விட்டு பாதுகாப்பற்ற கட்டிடங்களில் செயல்பட்டு சட்ட விதிகளுக்கு முரணாக கட்டிடம் கட்டியதற்கு குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ள வள்ளியம்மை சொசைட்டியின் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஏழை மாணவர்களின் நலன் காக்க மேற்கண்ட பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தவும் கேட்டு அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிய புகார் மனு மற்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள புகார்களுக்கு ஆதாரமான ஆவண நகல்கள் மனுவை பதிவு அஞ்சலில் அனுப்பப் பட்டுள்ளது. மாணவர் நலனில் அக்கரை கொண்ட அனைவரும் இதனை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் மக்களிடம் இதற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏழைகளுக்கு அரசின் மூலம் நியாய விலையில் கல்வி கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இந்த புகாரோடு அனுப்பப் பட்ட ஆதாரங்கள் மற்றும் அது அனுப்பப் பட்டதற்கான அஞ்சல் அலுவலக ரசீதுகள் தனியாக ஏற்றப்பட்டுள்ளன. அவற்றையும் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் இது போல் தமிழ்நாட்டில் நடக்கும் கல்வி கொள்ளை பற்றி எவரிடமேனும் ஆதாரங்கள் இருந்தால் அதனை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி தந்து உதவவும் கேட்டுக் கொள்கிறோம்.
நாள் : 04.03.2015
பெறுநர்
- உயர்திரு. அரசு தலைமை செயலர் அவர்கள்,
புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
- உயர்திரு. உயர் கல்வி துறை செயலர் அவர்கள்,
புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
- உயர்திரு. உள்துறை செயலர் அவர்கள்,
புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
- உயர்திரு. காவல்துறை இயக்குனர் அவர்கள்,
டி.ஜி.பி. ஆபிஸ், கடற்கரை சாலை, சென்னை.
- உயர்திரு. துணை வேந்தர் அவர்கள்,
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
- உயர்திரு. துணை வேந்தர் அவர்கள்,
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்,
69, அண்ணா சாலை, கிண்டி, சென்னை – 32
- உயர்திரு. ஆணையாளர் அவர்கள்,
நகர் ஊரமைப்பு துறை,
807, அண்ணா சாலை, சென்னை – 2.
8 உயர்திரு. தலைவர் அவர்கள்,
மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணை குழு (SEIAA), பனகல் கட்டிடம், சைதாப்பேட்டை, சென்னை
- உயர்திரு. அரசு செயலர் அவர்கள்,
சுற்றுச்சூழல் துறை,
புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
- உயர்திரு. சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அவர்கள்,
பனகல் கட்டிடம், சைதாப்பேட்டை, சென்னை.
- உயர்திரு. அரசு செயலர் அவர்கள்,
பொதுப்பணித்துறை, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
- உயர்திரு. கண்காணிப்பு பொறியாளர், WRD/PWD
State Ground water and Surface water Resources Date Centre, தரமணி, சென்னை – 13
- உயர்திரு. தீயணைப்பு துறை இயக்குனர் அவர்கள், சென்னை
- உயர்திரு. மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள், காஞ்சிபுரம்
- உயர்திரு. மாவட்ட சுகாதார பணித்துறை இணை இயக்குனர், காஞ்சிபுரம்
- உயர்திரு. நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குனர், காஞ்சிபுரம்;
- உயர்திரு. உதவி கோட்ட அலுவலர், தீயணைப்பு – மீட்புப்பணி துறை,
காஞ்சிபுரம் கோட்டம், காஞ்சிபுரம்
- உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள், தாலுகா அலுவலகம், செங்கல்பட்டு
அன்புடையீர்,
பொருள் : உரிய அனுமதியின்றி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முகமாக தீயணைப்பு
துறையின் அனுமதியோ, அங்கீகாரமோ, சுற்றுச்சூழல் கமிட்டியின் அங்கீகாரமோ இன்றி உச்சநீதிமன்ற உத்தரவிற்கு விரோதமாகவும் நகர் ஊரமைப்பு சட்ட விதிகளுக்கு முரணாகவும் பொது கட்டிட உரிம விதிகளுக்கு முரணாகவும் மற்றும் தீதடுப்பு சட்ட விதிகளுக்கு முரணாகவும் கட்டிடம் கட்டி இயக்கி வரும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் வள்ளியம்மாள் சொசைட்டி மீது உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட கட்டிடங்களை சென்னையில் அனுமதியற்ற கட்டிடங்களை அகற்றியது போல் அகற்றவும் அதுவரை கட்டிடங்கள் பொது பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப் படுவதை தடுக்கும் முகமாக பூட்டி சீல் வைக்கவும் அனுமதியற்ற பாதுகாப்பற்ற கட்டிடங்களில் எஸ்.ஆர்.எம்.கல்வி குழும கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கவும் மற்றும் முறைகேடாக நடைபெறும் வள்ளியம்மாள் டிரஸ்டின் பொறுப்பை தனி அலுவலர் மூலம் அரசே ஏற்று நடத்தவும் மேற்கண்ட டிரஸ்டின் மூலம் சட்ட விதிகளுக்கு முரணாக நடைபெறும் கல்வி நிறுவனங்களின் பொறுப்பை அரசே ஏற்று நடத்தவும் நடவடிக்கை எடுக்க பணிவான விண்ணப்பம்
பார்வை : 1. அரசாணை G.O.Ms. No. 11 Revenue Department dated 20.01.97
- Tamilnadu Protection of Tank and Eviction of
Encroachment Act, 2007
- G.O.Ms.No. 127 Environment and Forest (EC-3)
Department dated 8.5.98
- Additional Chief Secretary, Dept. of Environment and
Forest (EC.III) Govt., of Tamilnadu letter No.
18287/EC.III/2013-1 dated 26.8.13
- Member Secretary, Tamilnadu Pollution Control Board
letter No. TNPCB/LAW/LA.II/F.No. 3641/2014 dated
30.01.2014
- District Fire officer, Kancheepuram letter No.
ஓ.மு.எண். 5/ஆ/2015 நாள் 27.01.2015
பார்வையில் கண்ட கடிதங்களுக்கு தங்கள் மேலான கவனத்தை ஈர்க்கிறேன்.
பார்வை 1-ல் கண்ட அரசாணையில் ஏரி, குளம் மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்கவும் அவற்றின் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் அகற்ற வேண்டும் என்றும் வருவாய் துறை அலுவலர்கள் புலத்தணிக்கை மூலம் இதனை உறுதி செய்ய வேண்டும் என பார்வையில் கண்ட அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் பொது கட்டிடங்களுக்கு எந்த அனுமதியும் கொடுக்க கூடாது என்பதை பல்வேறு தீர்ப்புகளில் குறிப்பிட்டு உள்ளது.
உச்சநீதிமன்றம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் நீர் நிலை மற்றும் கிராம சபை பொறுப்பி;ல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதை கடந்த 28.01.2011 அன்று வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.
அதே போல் தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு ஏரி குளங்களை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 என ஒரு சட்டத்தை இயற்றி மேற்கண்ட சட்டம் தமிழ்நாடு அரசு அரசிதழில் 01.10.2007-ல் வெளியிட்டு அதன் மூலம் அமுலுக்கு வந்துள்ளது. இதன் மூலமும் ஏரி குளங்கள் மட்டும் அல்லாமல் நீர் கொண்டு செல்லும் வாய்க்காலும் ஆக்கிரமிக்க படக் கூடாது என்பது தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
பார்வை 3-ல் கண்ட அரசாணையிலும் நீர்நிலைகளில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவு மாசு ஏற்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்தையும் மறைத்து வள்ளியம்மை சொசைட்டி மற்றும் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் கல்லூரி கட்டிடங்களை கட்டி இயக்கி வருகிறார்கள். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு பொது கட்டிட உரிமம் வழங்குதல் சட்டம், நகர் ஊரமைப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு ஏரி குளங்களை பாதுகாத்தல் சட்டம், அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழும சட்டம் ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு முரணானது.
உண்மையில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் பொத்தேரி மற்றும்; வல்லாஞ்சேரி கிராமத்தில் கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் மாணவர் விடுதிகளை நடத்தி வரும் கட்டிடங்கள் அடுக்குமாடி குடியிருப்பு என்று எஸ்.ஆர்.எம். இன்ஜினியரின் அண்ட் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு என அனுமதி வழங்கப்பட்ட இனம் ஆகும். இவை கல்வி நிறுவனம் நடத்துவதற்கு என அங்கீகரிக்கப் பட்டவை அல்ல. இவற்றில் கல்வி நிறுவனம் நடத்த எந்த கட்டிட அனுமதியும் வழங்கப்படவில்லை.
உண்மையில் அனுமதியே பெறாமல் இயங்கி வரும் மேற்கண்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழக கட்டிடங்கள் ஏற்கனவே உள்ள அனுமதியை தற்போது விரிவாக்கம் செய்யப் போவதாக தவறான தகவல்களை அரசுக்கு கொடுத்து அனுமதி பெற முயற்சி செய்தார்கள். இது மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணை குழுவால் கண்டுபிடிக்கப்பட்டு தமிழக அரசு கூடுதல் தலைமை செயலருக்கு வள்ளியம்மை சொசைட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை மீறி சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக கட்டிடங்களை கட்டி கல்லூரி முதலியவற்றை இயக்கி வருவது அறிக்கை செய்யப்பட்டது.
மேலும் மேற்கண்ட கல்வி நிறுவனங்களின் தலைவரும் வள்ளியம்மை சொசைட்டியின் நிர்வாக டிரஸ்டியுமான திரு.பச்சைமுத்து அவர்கள் மேற்கண்ட விதிமீறலை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கடிதம் வழங்கி உள்ளார்கள். அதன் நகல் இணைக்கப் பட்டுள்ளது.
கூடுதல் தலைமை செயலர் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிமீறலுக்காக இந்திய அரசு உத்தரவு படி வள்ளியம்மை சொசைட்டி மீது குற்ற வழக்கு தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலருக்கு ஆணையிட்டார்கள். அதன் அடிப்படையில் தற்போது அம்பத்தூர் நடுவர் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தாக்கல் செய்யப் பட்டு நிலுவையில் உள்ளது.
கூடுதல் தலைமை செயலரின் உத்தரவு மற்றும் குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளதை உறுதி படுத்தி மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் எழுதிய கடித நகல் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
எனவே தற்போது பொத்தேரி மற்றும் வல்லாஞ்சேரியில் இயங்கி வரும் வள்ளியம்மை சொசைட்டிக்கு உரிமை உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் கல்வி நிறுவனங்களின் கல்லூரிகளுக்கு
1) பொதுப்பணித்துறையின் அனுமதி இல்லை.
2) கட்டிட உறுதி சான்று இல்லை.
3) பொது கட்டிடங்கள் உரிமம் சட்டத்தின் கீழ் கட்டிட உரிமம் இல்லை.
4) நகர் ஊரமைப்பு துறையின் அங்கீகாரம் அல்லது அனுமதி இல்லை.
5) நன்செய் நிலத்தை நிலமாற்றம் செய்து அரசு ஆணை பெறாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
6) தீயணைப்பு துறையின் அனுமதி இல்லை.
முழுவதும் விவசாய நஞ்சை நிலங்கள், கழிவு நிலம் என சுற்றுச்சூழல் அறிக்;கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே உண்மையை மறைத்து அனுமதி பெற முயற்சி செய்கிறார்கள். விண்ணப்ப படிவம் 1-A-யில் பத்தி 1.8-க்கு அவர்கள் கொடுத்துள்ள பதிலை பார்த்தால் நஞ்சை நிலம் இல்லை என குறிப்பிட்டு இருப்பார்கள். ஆனால் உண்மையில் நஞ்சை நிலம் (Wet land) உண்டு என்பது அவர்கள் தாக்கல் செய்த பட்டாவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
பார்வையில் கண்ட காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கடிதத்தில் மேற்கண்ட நிறுவனங்களுக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கும் போது அந்நிலங்களுக்கு ஊடே செல்லும் பாசன வாய்க்காலுக்கு இடையூறு இல்லாமலும், அதன் வழியாக நீர் செல்வதை தடுக்காமலும் கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் மற்றும் வல்லாஞ்சேரி, பொத்தேரி குளங்களில் உள்ள இதர பகுதிகளுக்கு நீர் செல்வதை தடுக்க கூடாது என்றும் மேற்கண்ட வாய்க்காலை கடப்பதற்கு சிறுபாலம் கட்டும் போது பொதுப்பணித்துறையின் அனுமதி பெற்று கட்ட வேண்டும் என்றும் வல்லாஞ்சேரி, பொத்தேரி ஏரிக்கரைகளின் அருகில் உள்ள புறம்போக்கு நிலங்களை வருவாய் துறை உதவியோடு கண்டறிந்து எல்கை கற்கள் நட வேண்டும் என்றும் மேற்கண்ட வாய்க்கால்களின் அகலம் வருவாய் துறை ஆவணத்தில் குறிப்பிட்ட படி இருக்க வேண்டும் என்றும் அதனை குறைக்க கூடாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள். ஆனால் மேற்கண்ட வாய்க்கால்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் பல ஆயிரம் மாணவர்கள் படித்து வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாணவர்கள் மேற்கண்ட வாய்க்கால் தண்ணீரில் சிக்கி உயிரிழந்து உள்ளார்கள். இவர்கள் பெரும் பணம் செலவு செய்து வேறு காரணத்திற்காக உயிரிழந்தது போல் உண்மையை மறைத்து வருகிறார்கள். எனவே அந்த பகுதி மாணவர்கள் கல்வி கற்பதற்கு பாதுகாப்பான பகுதி அல்ல.
மேலும் எஸ்.ஆர்.எம் நிறுவனம் மேற்கண்ட வாய்க்காலையே மணல் போட்ட மூடி நீர்வரத்தையே தடை செய்து விட்டார்கள். எனவே ஏராளமான ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு விட்டது. நஞ்சை நிலங்களில் கட்டிடம் கட்ட அனுமதிக்கவே முடியாது. இதற்கு தமிழகத்தில் தனியாக அரசாணை உள்ளது.
பொதுப்பணித்துறையின் மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்பட்டதற்கு நாளது தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் மேற்கண்ட பொதுப்பணித்துறை கடிதத்திலேயே கட்டிடம் கட்டுவதற்கு முன் பள்ளமான நிலங்களை தகுதியான கல் மற்றும் மண் கொண்டு மேடு படுத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டு உள்ளார்கள். ஆனால் விண்ணப்பத்தில் நிலம் பள்ளமாக இருப்பதை குறிப்பிடாமல் நிலம் சமதரையாக உள்ளது என விண்ணப்பம் பத்தி 1.4-ல் குறிப்பிடுகிறார்கள். எனவே இவர்கள் தவறான தகவலை அரசுக்கு கொடுத்து அனுமதி பெற முயற்சி செய்கிறார்கள்.
அதே போல் தீயணைப்பு துறை துணை இயக்குனர் கடிதத்தில் ஆறு நிபந்தனைகளுடன் தற்காலிக தடையின்மை சான்று வழங்கி அவற்றை பூர்த்தி செய்து தீயணைப்பு துறையில் பணம் செலுத்தி ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்து தீயணைப்பு துறையின் அனுமதியை பெற வேண்டும் என 05.03.2009 அன்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இந்த இனத்தில் நாளது தேதி வரை அவ்வாறு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டு தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதில் குறிப்பிட்டபடி அமைக்கப் பட்டு பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி தீயணைப்பு துறை மூலம் வழங்கப் பட்டு தீயணைப்பு துறையின் அனுமதி பெறப்படவில்லை. எனவே 1985-ம் வருடத்திய தீச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். உடனடியாக தீயணைப்பு துறையின் முறையான அனுமதி இல்லாமல் இயங்கும் இந்த கட்டிடம் பயன்பாடு நிறுத்தப்படவில்லை என்றால் அங்கு படிக்கும் மாணவர்களின் உயிருக்கு எந்த நேரமும் தீஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
கல்லூரி கட்டிடம் கட்டிட உறுதி சான்று மற்றும் அனுமதி, கட்டிட உரிமம் பெறவில்லை என்றால் இயக்க முடியாது. இந்த நிறுவனம் நடத்தும் எந்த கல்வி நிலையங்களுக்கும் இவ்வாறு கட்டிட உறுதி சான்றும், பொது கட்டிட உரிமமும் நாளது தேதி வரை பெறப்படவில்லை.
நகர் ஊரமைப்பு துறையின் அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டு இருந்தால் அந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வரக் கூடாது என்பதும் நகர் ஊரமைப்பு துறை அதனை மூடி சீல் வைக்க வேண்டும் என்பதும் சட்டம். மேலும் அனுமதியற்ற கட்டிடங்கள் ஏராளமாக சென்னை நகரில் இடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த இனத்தில் நகர் ஊரமைப்பு துறையின் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள மேற்கண்ட கட்டிடங்கள் மீது இவ்வாறான சட்ட பூர்வ நடவடிக்கை எதுவும் நாளது தேதி வரை மேற்கொள்ளப்படவில்லை.
அரசு புறம்போக்கு வாய்க்கால் நிலத்தை ஆக்கிரமித்தற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை பிறப்பித்த அரசாணையின் படி ஏரி, வாய்க்கால், குளம், ஆகியவற்றின் அருகில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏரி கரையின் அருகில் அமைந்துள்ள இந்த கட்டிடங்களை சுமார் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது போல் விண்ணப்பம் சமர்பித்து பொதுப்பணித்துறை நிலத்தடி நீர் பிரிவு, தரமணியில் இருந்து ஆறு ஆழ்துளை கிணறுகளுக்கு தடையில்லா சான்று பெற்றுள்ளார்கள்.
எனவே தவறான தகவல் கொடுத்து தடையில்லா சான்று பெற்றதற்கு அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதோடு அந்த தடையில்லா சான்றும் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.
அதே போல் சுற்றுச்சூழல் அனுமதிக்கு உள்ள விண்ணப்பத்திலும் தவறான தகவலை கொடுத்துள்ளார்கள்.
ஊராட்சி சட்டப்படி வீடு மற்றும் கடைகள் கட்டுவதற்கு மட்டுமே ஊராட்சி நிர்வாக அதிகாரி கட்டிட அனுமதி கொடுக்க முடியும். கல்வி நிறுவனங்கள் அமைப்பதற்கு மற்றும் பொது கட்டிடங்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பு பொதுப்பணித்துறை, மாவட்ட சுகாதார பணித்துறை இணை இயக்குனர், தீயணைப்பு துறை முதலியவற்றின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டும். ஆனால் அவ்வாறு எந்த அனுமதியும் பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக வீட்டு கட்டிடம் என முன் தேதியிட்டு பஞ்சாயத்தில் எந்த ஆவணமும் இல்லாமல் இவர்கள் சில கட்டிட அனுமதிகளை பெற்றதாக பொய் ஆவணம் தயாரித்து உள்ளார்கள். எனவே அதற்கும் இவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே தாங்கள் உடனடியாக உரிய அனுமதியின்றி இயங்கும் மேற்கண்ட கட்டிடங்களால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக மேற்கண்ட கட்டிடங்களின் பயன்பாட்டை நிறுத்தி அவற்றை பூட்டி சீல் வைத்து ஏராளமான மாணவர்களின் உயிரை பாதுகாக்கவும் மீண்டும் ஒரு கும்பகோணம் தீவிபத்து போல் பெரும் விபத்து நடக்காமலும் சென்னையில் தற்போது இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம் போலவும், இந்த கட்டிடங்கள் இடிந்து மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்கவும், மேலும் உரிய முறையான கட்டிட அனுமதிகள், தீயணைப்பு துறை அனுமதிகள் ஆகியவை பெற்று கட்டிடத்தை முறையாக கட்டி முடித்து அனுமதி பெரும் வரை மேற்கண்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பல்கலைக்கழக அனுமதி மற்றும் கல்வி நிறுவன அங்கீகார அனுமதிகளை நிறுத்தி வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும், தவறு செய்த மேற்கண்ட நிறுவன நிர்வாகிகள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய ஆணை பிறப்பிக்க பணிவாய் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இந்திய டிரஸ்ட் சட்டத்தின் படி வள்ளியம்மாள் சொசைட்டியை நிர்வகிக்க ஒரு தனி அலுவலரை நியமிக்கவும் மேற்கண்ட சொசைட்டி நடத்தும் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களை அரசே தனி அலுவலர் நியமித்து நடத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் பணிவாய் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் மேற்கண்ட சட்ட விதிமீறலுக்கு நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்த அரசு அலுவலர் மீதும் அரசு பணியாளர் நடத்தை விதிகளின் படியும் இந்திய தண்டனை சட்டப்படியும் குற்ற நடவடிக்கை தொடரவும், துறை நடவடிக்கை தொடரவும் பணிவாய் கேட்டுக் கொள்கிறேன்.
தாங்கள் எடுத்த நடவடிக்கை விபரத்தை எனக்கு தெரியப்படுத்தவும் பணிவாய் கேட்டுக் கொள்கிறேன். பார்வையில் குறிப்பிட்டுள்ள கடித நகல்கள் இத்துடன் இணைத்து அனுப்பப் பட்டுள்ளது.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
Sd/-
எஸ்.கிருஷ்ணமூர்த்தி
இணைப்பு
1) நீர் நிலைகள் அருகில் ஆக்கிரமிப்பை அகற்றவும் அவற்றை பாதுகாக்கவும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எண் 11 நாள் 20.01.97
2) தமிழ்நாடு ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007-ன் முக்கிய அம்சங்கள்.
3) நீர் நிலைகளில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிறுவனங்கள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எண் 127
4) வள்ளியம்மாள் சொசைட்டியின் மீது குற்ற வழக்கு தொடர்வதற்கு தமிழக அரசு கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவு நாள் 26.8.2013
5) வள்ளியம்மாள் சொசைட்டி மீது குற்ற வழக்கு தாக்கல் செய்த விபரத்தை மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணை குழுவிற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் தெரிவித்த கடிதம் நாள் 30.01.2014
6) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி கட்டிடம் கட்டியதை ஒப்புக் கொண்டு அதற்கு மன்னிப்பு கோரி வள்ளியம்மாள் சொசைட்டி தலைவர் திரு.பச்சைமுத்து கொடுத்த கடிதம் நாள் 18.07.2013
7) காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கொடுத்த ஆறுமாத காலம் செல்லுபடியாகும் தற்காலிக தீயணைப்பு தடையின்மை சான்று நாள் 05.03.2009
8) மத்திய நிலத்தடி நீர் வாரியத்திடம் இருந்து தடையின்மை சான்று பெற வேண்டும் என தலைமை வன பாதுகாவலர் எழுதிய கடிதம் நாள் 12.02.2013
9) மேற்கண்ட நிலங்களின் வழியாக பாசன வாய்க்கால் செல்கிறது. நிலத்தை ஒட்டி ஏரிகள் உள்ளன என்பதற்கும் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன என்பதை நிரூபிக்கவும் காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எழுதிய கடிதம் நாள் 21.11.2006
10) போத்தேரி கிராமத்தில் தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களில் மொத்தம் 364 குடியிருப்புகள் கொண்ட குடியிருப்பு உபயோக கட்டுமானம் கட்டுவதற்கு தான் எஸ்.ஆர்.எம். இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு நகர் ஊரமைப்பு துறை இயக்குனரால் அனுமதி வழங்கப் பட்டுள்ளது என்பதை காண்பிக்க இயக்குனரின் செயல்முறை ஆணை நாள் 07.10.2010
11) ஏரி பாசன நன்செய் நிலங்கள், விவசாயத்திற்கு லாயக்கற்ற கழிவு நிலம் என உண்மையை மறைத்து அனுமதி பெற திரு.எஸ்.ஆர்.எம்.பச்சைமுத்து முயற்சி செய்கிறார் என்பதை காண்பிக்க மேற்கண்ட நிலங்கள் நன்செய் நிலங்கள் என உள்ள பொத்தேரி கிராம பட்டா எண் 564-ன் நகல்
12) பொதுப்பணித்துறை பொறியாளர் பள்ளமான நிலம் என குறிப்பிட்டுள்ளதை மறைத்து பாறையான நிலம் என பத்தி 1.4-லும், நன்செய் நிலத்தை நன்செய் நிலம் அல்லது பள்ளமான நிலம் இல்லை என பத்தி 1.8-ல் தவறான தகவலை கொடுத்து அனுமதி பெற முயற்சி செய்துள்ளதை நிரூபிக்க.
மேலும் எனது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிரூபிப்பதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெறப் பட்டு பாதுகாப்பில் உள்ளது. தேவைப்படும் போது ஆஜர் படுத்த தயாராக உள்ளேன்.
Super. We should spread through our friends and Students Federation of India and demand State and Central Govt to take over the university to save the students future.
இந்த மனுவுக்கு பதில் வந்ததா நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டதா!