எஸ்.ஆர்.எம் பல்கலையில் மருத்துவ படிப்புக்கு பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவிடம், இதுவரை ஏன் விசாரணை நடத்தவில்லை என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போனது தொடர்பாக அவரது தாயார் தங்கம் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் மருத்துவ படிப்புக்கு பணம் கொடுத்து ஏமாந்த பெற்றோர்கள் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த இரண்டு மனுக்களும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசு சார்பில் விசாரணை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் சமர்பிக்கப்பட்டன. அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலரிடையே விசாரணை நடத்தாமல் இருப்பதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இதில் தொடர்புடைய இடைத்தரகர்கள் அருண், பவுலின் ஆகியோரை ஏன்? கைது செய்யவில்லை என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் இதுவரை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவிடம் விசாரணை நடத்தாததில் என்ன சிக்கல் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், விசாரணையை தொடர 15 நாள் கால அவகாசம் வேண்டும் என்றும், தேவைப்பட்டால் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனர் பச்சமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் விளக்கம் அளித்தார்.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடையோர் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யுமாறும், வரும் 30ம் தேதிக்குள் மதனை ஆஜர்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வழக்கு சிபிஐ உள்ளிட்ட வேறு அமைப்புக்கு மாற்றி உத்தரவிடப்படும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Link : http://ns7.tv/ta/why-there-no-probe-srm-pachamuthu-case-cheating-money.html