பாமக நிறுவனர் ராமதாஸின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு எதிராக அக்கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், பாமகவின் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சத்திய நாராயணன் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
அதில், பச்சமுத்து வெளியிட்ட அறிக்கை கடந்த 11ம் தேதி செய்தித் தாள்களில் வெளியானதாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கோடி கோடியாக பணம் செலவழித்து பாமக விளம்பரம் செய்ததாக பச்சமுத்து குற்றம் சாட்டியுள்ளதை சத்தியநாராயணன் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கட்சிக்காரர்கள் மூலம் பணம் கேட்டு தன்னிடம் கை நீட்டியதாக பச்சமுத்து கூறியிருப்பதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விரு குற்றச்சாட்டுக்களும் தவறானவை என தெரிவித்துள்ள சத்திய நாராயணன், இது ராமதாசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அறிக்கை வெளியிட்ட பச்சமுத்து மீது, குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராமதாசின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக உரிய இழப்பீட்டினை பச்சமுத்துவிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்றும் சத்திய நாராயணன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஈஸ்வர மூர்த்தியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு மீதான விசாரணை, வரும் 24ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : http://ns7.tv/ta/pmk-files-defamation-case-against-pachamuthu.html